Wednesday, 5 December 2012

கல்லெறிந்தவனுக்கும் கருணை!

அந்த நாட்டுக்கு மகான் ஒருவர் வந்தார். அவரை தரிசிக்க பெரும் கூட்டம் திரள்கிறது என்பதை அறிந்த அந்த நாட்டு மன்னனுக்குப் பொறாமை.


'பண பலமும் அதிகார பலமும் கொண்ட தன்னை விட, அந்த மகான் எந்த விதத்தில் உயர்ந்தவர்?' என்று எண்ணியவன், இது பற்றி அறிய மாறு வேடத்தில், மகானின் இருப்பிடத்துக்குச் சென்றான்.


அங்கு, மரத்தடியில் அமர்ந்து அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார் மகான். அப்போது, திடீரென்று பறந்து வந்த கல் ஒன்று மகானின் நெற்றியை பதம் பார்த்தது. கூட்டத்தினர் கல்லெறிந்தவனைப் பிடித்து, தண்டிக்க முற்பட்டபோது, மகான் தடுத்தார்.


''ஏனப்பா என் மேல் கல்லெறிந்தாய்?'' என்று அவனைப் பார்த்துகேட்டார் மகான். அவன், ''பழம் பறிப்பதற்காகக் கல் எறிந்தேன்.


 அது, தங்கள் மேல் விழுந்து விட்டது!'' என்றான்.அவனை ஆறுதலுடன் அணைத்துக் கொண்ட மகான், சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கூறினார்:


''பாருங்கள்... தன் மேல் கல்லெறிந்தவனுக்கு, பழங்களைத் தருகிறது மரம். நாம் மட்டும் தண்டனை தரலாமா?''


'பகைவனுக்கு அருளும் நல்லுள்ளம் உடையவரே உண்மையில் உயர்ந்தவர்!' என்பது அந்த மன்னனுக்குப் புரிந்தது.

Tuesday, 4 December 2012

சிகரட்டை காதலிக்கும் ஒரு நபரின் காதல் கடிதம்!


என் இதயத்தை கொள்ளைகொண்ட சிகரட்டே ....

உன் முன்னால் காதலன் எழுதும் கடைசி மடல் , உனக்கு கடிதமா என யோசிக்காதே .

நீயும் என் காதலிதான்

இதுவும் நிச்சயம் காதல்கடிதம்தான்

காதலியை அணைத்தபின் அனுபவிப்பேன்

உன்னை அனுபவித்து பின் அணைப்பேன் .

நீயும் என் காதலிதான் உன் வேலையும் இதயத்தில் நுழைவதுதானே .

நம் உறவும் காதலைப்போல் தானே துவங்கியது , நண்பர்களால் அறிமுகமானாய் , முதன்முதலில் நீ எனக்கு எப்போதாவது நண்பர்களின் உதவியோடு ஊருக்குள் மறைவாய் யாருமில்லா இடங்களிலே ,உன்னை முதன்முறை பார்க்கையில் உடனே பிடிக்கவில்லை உன்னுடனான தொடர்பு நண்பர்களினூடே தந்த கௌரவம் எனை மாற்றியதோ .

என் இதழ்களுடனான உன் முதல் சந்திப்பு அத்துனை இதமாய் இருந்திருக்கவில்லை , அதன் பின் இரண்டாம் முத்தம் இதமாய் மூன்றாம் முத்தம் சுகமாய் நான்கைந்தில் அடிமையாக்கினாய் , என் இதழுடனான உன் உறவு அதிகமாக , உன்னை சந்திக்கவே பல நாட்கள் என் நண்பர்களை சந்தித்திருக்கிறேன் தெரியுமா .

உன்னுடனான எனது தொடர்பு என் வீட்டில் பல நாள் தெரிந்து போய் என் தந்தையிடமும் தாயிடமும் எவ்வளவு அடி வாங்கியிருப்பேன் தெரியுமா , எல்லாம் உனக்காக! உன்னொடு என்னை என மாமன் பார்த்துவிட்டு அடித்த அடி எத்தனை வலித்தது தெரியுமா . எல்லாம் எதற்காக உனது உறவுக்காய் . காதலில் வலியும் வேதனையும் சகஜம் தானே .

நண்பர்களின் உதவியோடு உனை சந்தித்த அந்த பால்ய பருவம் கடந்து போய் நானே உன்னை சந்திக்க விழைந்தேன் . அத்தனிமையில் இனிமையாய் உன்னை என் உதடுகளின் மத்தியில் வைத்து பிடித்து ......... ஆனந்தம் . நண்பர்களுடன் பேசும் சமயங்களைவிட உன்னை தனிமையில் சந்திக்கையில் உன்னை அதிகம் விரும்பினேன் . எப்போதும் விரும்புவேன் .

காலம் ஓடியது , நம் உறவு பிரிக்க முடியாததும் , உடைக்க முடியாததுமாய் நானும் நீயும் பின்னி பிணைந்து என் உடலில் கலந்து உயிரிலும் கலந்து விட்டாய் .

இப்போதெல்லாம் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை என்பது போல எந்நேரமும் என் விரலிடுக்கில் , உதடிடுக்கில் என எப்போதும் காலை முதல் மாலைவரை உன்னை நினைக்காத நொடியில்லை . என் இதயத்தில் எந்த காதலியும் இத்தனை சீக்கிரம் பிடித்திடாத இடத்தை நீ பிடித்து விட்டாய் . இதயம் மட்டுமல்ல நுரையீரல்,கல்லீரல் ,கணையம் என எந்த காதலியும் அமர முடியாத இடத்திலெல்லாம் நீதான் நீ மட்டும்தான் . நீ காதலியை விடவும் உயர்ந்தவள் .

உன்னால் என் இதயத்தில் கோளாறு வருமாம் என் உயிருக்கே ஆபத்தாம் , அஞ்சமாட்டேன் இதற்கெல்லாம் , கேன்சர் என்றால் பயந்து விடுவேன் என்று நினைத்தாயோ , நம் உறவு அதையும் தாண்டி புனிதமானது . உனை பிரிந்து நான் எப்படி , சோறின்றி கூட பட்டினி கிடப்பேன் உன்னை பிரிந்து ஐயகோ நினைக்கவே அச்சமாக இருக்கிறதே .

நம் இணைபிரியா உறவை சிதைக்க அரசாங்கம் கூட முயல்கிறது , இதோ போட்டுவிட்டான் தடையுத்தரவு , என்ன கொடுமை கோல்டு பில்டரே!!....

பொது இடத்தில் உன்னை சந்திக்கத் தடையாம் , இனி உன்னை வீட்டில் மட்டுமே சந்திக்க வேண்டுமாம். இயலுமா , நாம் அப்படியா பழகியிருக்கிறோம் , என்றுமே நம் காதல் கள்ளக்காதல்தானே . அலுவலகத்தில் , பேருந்து நிறுத்தத்தில் , பொது இடத்தில் எங்கும் இனி நாம் சந்திக்க இயலாதாம் .

எவன் தடுத்தாலும் விடேன் , அந்த எமன் தடுத்தாலும் விடேன் , மறைவாய் உன்னை சந்திக்க ஆயிரம் இடமிருக்கையில் எனக்கென்ன கவலை என அடித்தேன் அடித்தேன் விடாமல் அடித்தேன் மறைவாய் சந்தில் பொந்தில் இண்டு இடுக்கு என யார் கண்ணிலும் படாமல் உனை அனுபவிக்கிறேன் , நிறைய நிறைய நிறைய நிறைய......

வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ? என கவியரசர் பாடிச்சென்ற வரிகளும் பொய்யே , உனது சுவடுகள் நான் இறந்து மக்கி மண்ணாகும் வரை என் நெஞ்சுக்குள் நிலைத்திருக்கும் . நிக்கோடின் சுவடுகளாய் .. என் உயிர் பிரிந்தாலும் உனைப்பிரியேன் ;-)

ஆனால் ஒரு பத்து நாட்களாக என்னவோ தெரியல என்ன மாயமோ புரியல உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை , இறுமல் அதிகமாகி அதிகமாகி இதயமே வாய் வழியாய் வந்துவிடும் போலிருந்தது . டாக்டரிடம் கேட்டால் காசநோயாம் !!! அட கருமம் புடிச்ச பன்னாடை பரதேசி நாய்ங்களா ... கேன்சர்தானடா வரும்னு சொன்னீங்க தீடீர்னு இது வந்திருச்சுனு சொன்னேன் , அதெல்லாம் ஒத்துக்கமுடியாது னு சொன்னாலும் வந்தது வந்ததுதான் நொந்தது நொந்ததுதான் என்று இளையராஜா வாய்ஸில் பாடுகிறார் .

அடிப்பாவி உன்னை காதலிச்ச பாவத்துக்கு என் நெஞ்சத்தான் கிழிச்சி தொங்கவிட்டனுபாத்தா கொஞ்ச கொஞ்சமா என் என் கு.........கு.......கு............குட்டி நுரையீரலையுமில்ல காலிபண்ணிட்ட..

பிறகென்ன ... ம்ம் வந்தது வந்துதான் நொந்தது நொந்தது தான்........

எப்போதும் போல எல்லா காதல் கதைகளின் முடிவும் இதுதானே ரோமியோ போல் , அம்பிகாபதியைபோல அமரக்காதல்னா கடைசியில் காதலனுக்கு முடிவு சங்குதானேதானே..

இப்படிக்கு...

நெஞ்சு பஞ்சா போயி பஞ்சரான

பஞ்சாபகேசன் ( இப்பல்லாம் எல்லாரும் நான் இருமுறத பாத்து கஞ்சாபகேசன்னுதான் கூப்பிடறாங்க ... எல்லாம் உன்னாலே உன்னாலே , சங்கூதினப்பறம் இப்படிலாம் கடிதமெழுத முடியாது அதான் முன்னாடியே , சாகறதுக்கு முன்னாடி சமாதி கட்ற மாதிரி.... )

உடல் எடையை குறைக்கும் உணவுகள்!



 எப்போதும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் ஈஸியான விஷயம் அல்ல.

யாருக்கு உடல் மிகவும் அழகாக ஸிலிம்மாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அவர்கள் கண்டிப்பாக தங்கள் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

அதற்காக சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றில்லை. அனைத்தையும் சாப்பிடலாம் ஆனால் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

அதிலும் சரியான டயட்டை மேற்கொள்ளாமல் இருந்தால், முகம் வாடி உடலில் செரிமானம் குறைந்து குடலானது சுருங்கிவிடும்.

ஆகவே ஆரோக்கியமான உடலை அழகான சருமத்தை பெற வேண்டுமென்றால், நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும்.

மேலும் ஒரு சில உணவுகள் மிகவும் குறைந்த கொழுப்புகள் நிறைந்திருப்பதோடு, அதைச் சாப்பிட்டால் உடல் அழகாக ஒல்லியாக இருக்கும்.

பெர்ரிஸ்: உடல் எடையை குறைக்க பெர்ரிப் பழங்கள் மிகவும் சிறந்தவை. ஏனெனில் அந்த பழத்தில் சுவையைத் தரும் ஆன்தோசையனின்கள், உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது.

இதற்காக ஒரு எலியின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த எலி எவ்வளவு தான் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டாலும், இந்த பழத்தை சாப்பிட்டதால் அதன் எடை கூடவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் ஆன்தோசையனின்கள் தான். ஆகவே எத்தகைய உணவுகளை உண்டாலும், இந்த பெர்ரி வகையைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி மற்றும் திராட்சை போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அதிலும் இதனை ஜூஸ் அல்லது சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம்.

ஆப்பிள்: ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஏனெனில் ஆப்பிளில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், அடிக்கடி பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

மேலும் உடலில் இரத்தம் நன்கு ஊறும். அதிலும் ஆப்பிளில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதிகமான அளவு கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

தக்காளி: சமையலில் பயன்படுத்தும் தக்காளி உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு உடலை சுத்தம் செய்கிறது.

அதிலும் தக்காளியில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் இருக்கிறது.

ஆகவே உடல் ஸ்லிம்மாக தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். ஆனால் இந்த தக்காளியை சமையலில் சேர்த்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது. ஏனெனில் சமைத்து சாப்பிட்டால் தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.

சொக்லேட்: சொக்லேட் என்று சொன்னதுமே அனைவருக்குமே ஒரு ஆசை ஏற்படும். அத்தகைய சொக்லேட்டில் டார்க் சொக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, சருமமும் மென்மையாக மின்னும்.

நிறைய ஆராய்ச்சியில் டார்க் சொக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொக்கோ உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு உடலை பிட்டாகவும் வைக்கும்.

அதுமட்டுமல்லாமல் சொக்லேட் இதய நோயைத் தடுப்பதோடு பசியையும் கட்டுப்படுத்தும். வேண்டுமென்றால் பசி ஏற்படும் போது சிறிது டார்க் சொக்லேட் சாப்பிட்டுப் பாருங்கள், சுவையாக இருப்பதோடு, பசி கட்டுப்பட்டு உடல் எடையும் கூடாமல் இருக்கும்.

ஆகவே இத்தகைய உணவுகளையெல்லாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாகாமல் உடலும் பிட்டாக, சருமமும் மென்மையாக அழகாக இருக்கும்.

Friday, 21 September 2012

நடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…!



அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் – 23 பாஸ்போர்ட் புக்குகள் காணவில்லை. இது வெறும் புக்தான் ஆனாலும் இதில் நன்கு தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் புழகத்தில் உள்ள பாஸ்போர்ட் மாதிரி உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தேவையான நம்பரை போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க முடியும். இதன் மூலம் தீவிரவாதிகள் இந்தியாவில் லீகலாய் நுழைய முடியும்.


sep 22 - ravi passport

 



இப்படிதான் 2010 ஆம் ஆண்டு இஸ்ரேல் உளவுத்துறை மோஸாட் – ஹமாஸ் தலைவரை துபாயில் கொல்ல கூட இந்திய பாஸ்போர்ட் புக்கை திருடித்தான் இந்த காரியத்தை முடித்தது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் (Z ) வகை 500 பாஸ்போர்ட்கள் காணாமல் போய் (Z) வைத்திருந்தாலே ஒரு மாதிரி செக் செய்யும் அவலம் இன்றும் ஏர்போர்ட் இமிகிரேஷனில் உலகம் முழுவதும உண்டு. இப்போது இந்த தொல்லை!.


தற்போது ஒரு இந்தியன் பாஸ்போர்ட்டுக்கு சுமார் 7 முதல் 10 லட்சம் வரை விலை போகும்-சர்வ சாதாரணமாய். இந்திய பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் அகமது இதை ஒப்பு கொண்டார். ஹும்.. பாஸ்போர்ட் தொலைஞ்சா எம்பஸில சொல்லாம், எம்பஸியே தொலைச்சா யாருக்கிட்ட சொல்ல முடியும்…!

Monday, 17 September 2012

தமிழைத் தாங்கி வந்த புதிய ஐபோன்கள்!





பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் ஐ.ஓ.எஸ் 7 என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தமிழ் மொழிச் செயல்பாட்டினையும் உள்ளடக்கியாதாக உள்ளது. இது தமிழுக்குப் பெருமையாகும். இது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.



ஐ போன் 5 எஸ் மற்றும் குறைந்த விலை போனாக ஐபோன் 5சி என இரு மாடல்கள் வெளியாகி உள்ளன. ஐபோன் 5 எஸ், 16, 32 மற்றும் 64 ஜிபி என மூன்று மாடல்களில், தங்கள், வெள்ளி மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கும். அமெரிக்காவில், இரண்டாண்டு மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்துடன் இவை 199, 299 மற்றும் 399 டாலர் கட்டணத்தில் கிடைக்கும். நிறுவன ஒப்பந்தம் இல்லாமல், அமெரிக்காவில், 16 ஜிபி போன் 549 டாலர், 32 ஜிபி 649 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. ஐபோன் 5சி, ஒப்பந்தக் கட்டுப்பாடு இல்லாமல், 549 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. பட்ஜெட் விலை போன் என்று கூறியதெல்லாம் சும்மா என மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.


மற்ற நாடுகளில் இந்த போன்களின் விலை, இவை சந்தைக்கு வரும்போது தெரியவரும். செப்டம்பர் 20 முதல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் இவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த போன்களுடன் ஐ.ஓ.எஸ்.7 என்னும் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது. முதன் முதலாக, தன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 18 முதல் இது டவுண்லோட் செய்திடக் கிடைக்கும். ஐபோன் 4, ஐபேட் 2, ஐபேட் மினி, மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றில் இயங்கும்.


2007 ஆம் ஆண்டு, முதல் ஐபோன் வெளியானது. இதில் இயங்கும் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஐ.ஓ.எஸ்.7 என்ற பெயரில், புதிய வடிவத்தில், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் தற்@பாது வெளிவருகிறது. தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏழாவது ஜெனரேஷன் என்பதால், இதற்கு ஐ.ஓ.எஸ்.7 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 200 புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பயனாளர் இண்டர்பேஸ், அறிவிப்பு மையம், விரைவாக அணுக்கம் பெற கட்டுப்பாடு மையம் என இதில் பல விஷயங்கள் புதியதாக அறிமுகமாகின்றன. மிகப் பளிச் எனத் தெரியும் வண்ணமயமான இண்டர்பேஸ் இதற்கு சரியான மேக் அப் ஆக தோற்றம் அளிக்கிறது. ஐ வொர்க் (iWork productivity suite), ஐ லைப் (iLife), ஐமூவி (iMovie) மற்றும் ஐ போட்டோ (iPhoto) ஆகிய அப்ளிகேஷன்கள், ஐ.ஓ.எஸ்.7 உடன் இணைந்து கிடைக்கின்றன. 



இவை, இந்த போன்களுக்கு நல்ல விற்பனையைத் தரலாம். ஏனென்றால், இந்த அப்ளிகேஷன்கள் மூலம், போட்டோக்களையும், வீடியோக்களையும் எடிட் செய்திட முடியும். ""இவை ஏற்கனவே மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவை ஆதலால், தற்போது இந்த போன்கள் மூலம் பயன்படுத்த மக்கள் ஆர்வப்படலாம். மேலும் வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இவை தரப்படுவதில்லை என்பதால், புதிய ஐபோன்களை, இதற்காகவே மக்கள் விரும்புவார்கள்'' என ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி டிம் குக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், ""தனக்கென ஒரு தனித்தன்மையையும், அதனையே தனிச் சிறப்பாகவும் பண்பாகவும் ஆப்பிள் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. அதனை மாற்றும் எந்த முயற்சிக்கும் நான் சாட்சியாகவும் இருக்க மாட்டேன், அனுமதிக்கவும் மாட்டேன்'' என்று கூறினார். இந்த போன்களைக் காண்கையில் இது முற்றிலும் உண்மை என்பது விளங்கும்.

ஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்:


1.ப்ராசசர்: ஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.

2. விரல் ரேகை: டச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது. பயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.

3. பேட்டரி: தொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.

4. கேமரா: இதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது. தானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.

5. இயக்கும் சிப்: இதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.

6. இலவச அப்ளிகேஷன்கள்: இதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன.

7. வடிவமைப்பு: இதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.

8. திரை: மல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

9. சிம்: இதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.

10. மொழிகள்: இதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன. 


ஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புக்கள் பின்வருமாறு:


1. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கிறது.

2. பாலிகார்பனேட் ஷெல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

3. சுற்றியுள்ள ஸ்டீல் ஸ்ட்ரக்சர் ஆன்டென்னாவாகச் செயல்படுகிறது.

4. ஏ6 (A6) சிப் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் காம்பஸ், ஜி.பி.எஸ்., வை-பி ஆகிய வசதிகள் உள்ளன.

5. ஐபோன் 5 எஸ் போல, இதிலும் 4 அங்குல திரை டிஸ்பிளே கிடைக்கிறது. ரெசல்யூசன் 1136 x 640 பிக்ஸெல்கள்.

6. கேமரா 8 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ரெடினா டிஸ்பிளே, போட்டோ ஜியோ டேக்கிங் வசதிகள் கிடைக்கின்றன. வீடியோ நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.

7. இதன் பரிமாணம் 124.4 x 59.2 x 8.97 மிமீ. எடை 132 கிராம்.

8. இதில் உள்ளாக அமைந்த லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டு, யு.எஸ்.பி மற்றும் பவர் அடாப்டர் வழியே அதனை சார்ஜ் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. தொடர்ந்து 3ஜி அழைப்புகளை 10 மணி நேரம் பயன்படுத்தலாம். வீடியோ 10 மணி நேரமும், ஆடியோ 40 மணி நேரமும் பயன்படுத்தலாம்.


இந்த போன் மக்கள் மனதில் பட்ஜெட் விலை போனாக இடம் பெறுமா என்பது சந்தேகமே. ஆனால், ஆண்ட்ராய்ட் போனால் சரியும் தன் மொபைல் போன் சந்தைப் பங்கினை, இந்த போன் தூக்கி நிறுத்தும் என ஆப்பிள் நிறுவனம் எண்ணுகிறது.


ஆப்பிள் தந்துள்ள இந்த இரண்டு மாடல்களில், மற்ற நிறுவனங்களின் மொபைல் போன்களில் காணப்படும் சில வசதிகள் இல்லை. அவை:


1. அண்மைக் கள தகவல் தொடர்பு எனக் கூறப்படும் Nearfield communications. வருங்காலத்தில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதால், ஆப்பிள் ஏன் இதனை விட்டுவிட்டது என்று தெரியவில்லை.


2. வயர்லெஸ் சார்ஜிங் தொழில் நுட்பம். ஆப்பிள் தொடர்ந்து இது குறித்து எந்த எண்ணமும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சாம்சங், எல்.ஜி. மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இதனைத் தங்களின் சில மாடல்களில் தந்து வருகின்றன. ஒருவேளை, இந்த தொழில் நுட்பம் இன்னும் சீராக வளர்ந்த பிறகு, ஆப்பிள் இதனைத் தன் மாடல் போன்களில் தர திட்டமிட்டிருக்கலாம்.


3. எச்.டி. ஸ்கிரீன்: ஹை டெபனிஷன் திரை தருவதை ஆப்பிள் இந்த மாடல்களிலும் தள்ளிப்போட்டுள்ளது. ஆப்பிள் போன் திரைகளில் காட்டப்படும் டிஸ்பிளே ரெசல்யூசன் இன்னும் பழைய பாணியிலேயே உள்ளது.


4. நம் வசப்படுத்தும் வசதி: இதில் நாமாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு மெமரி அதிகப்படுத்த இயலாது. நாமாக புதிய பேட்டரி ஒன்றை இணைக்க முடியாது.


மெமரி கார்ட் மற்றும் உபரி பேட்டரியினை வைத்து மொபைல் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டு என்றால், ஆப்பிள் போன்களை மறந்துவிடுங்கள். இருப்பினும், இதன் நவீன ப்ராசசர், பல வண்ணங்களில் வடிவமைப்பு ஆகியவை இம்முறை குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்களாகக் கிடைத்துள்ளன.